புதியவன்
பிரபல நடிகர் டானியல் பாலாஜி உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவரது மறைவு செய்தி திரை உலகைத் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்குள் வந்த நடிகர் டானியல் பாலாஜி. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவருக்கு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த 'காக்க காக்க' படம் பெயர் சொல்லும்படி அமைந்தது.
இந்தப் படத்தில் சிறிகாந்த் என்ற பொலிஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார் டானியல் பாலாஜி. பின்னர் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் திரை உலகை மிரட்டினார்.
தொடர்ந்து பொல்லாதவன் (ரவி), வை ராஜா வை, அச்சம் என்பது மடமையடா, பைரவா, வடசென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
டானியல் பாலாஜி பெரும்பாலும் வில்லன் நடிகராக நடிப்பார். அதற்கு அவரது குரல், மேனரிசம், உடல் மொழியும் பொருத்தமாக இருக்கும்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.