புதியவன்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 29 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 206 ஓட்டங்கள் எடுத்தது.
அணித் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் அரைச் சதம் பதிவு செய்தனர். இறுதிப் பந்துப்பரிமாற்றத்தில் களம் கண்ட எம். எஸ். டோனி 4 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சைத் தெரிவு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே இணைந்து இன்னிங்ஸை ஆரம்பித்தனர். 8 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே 5 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் அணித் தலைவர் ருதுராஜ் களத்துக்கு வந்தார். பவர்பிளே பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ஓட்டங்கள் எடுத்திருந்தது சி.எஸ்.கே.
8 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திரா வெளியேறினார். தொடர்ந்து ஷிவம் துபே களத்துக்கு வந்தார். ஹர்திக் வீசிய 10 பந்துப்பரிமாற்றத்தில் மூன்று நான்கு ஓட்டங்களை துபே விளாசினார்.
10 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 80 ஓட்டங்கள் எடுத்திருந்தது சி.எஸ்.கே. 13 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் அரைச்சதம் கடந்தார் ருதுராஜ். ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய 14 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் 22 ஓட்டங்கள், ஆகாஷ் மத்வால் வீசிய 15 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் 17 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன.
28 பந்துகளில் அரைச்சதம் கடந்தார் துபே. 40 பந்துகளில் 69 ஓட்டங்கள் எடுத்த ருதுராஜ் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை ஹர்திக் பாண்டியா கைப்பற்றினார். ஹர்திக் வீசிய 16 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் ஒரு விக்கெட் கைப்பற்றி 2 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.
5 ஆவது துடுப்பாட்ட வீரராகக் களம் கண்ட மிட்செல் இன்னிங்ஸை நிதானமாக அணுகினார். அடுத்த மூன்று பந்துப்பரிமாற்றங்களில் 29 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன.
14 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்த மிட்செல், இறுதிப் பந்துப்பரிமாற்றத்தின் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். அந்த பந்துப்பரிமாற்றத்தை ஹர்திக் வீசியிருந்தார். அடுத்ததாக டோனி களம் கண்டார். அவர் எதிர்கொண்ட முதல் மூன்று பந்துகளும் சிக்ஸர்.
அடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தார். அதோடு சென்னை சூப்பர் கிங்ஸின் இன்னிங்ஸ் முடிந்தது. 4 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்தார் டோனி. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த துபே 38 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
மும்பை அணிக்காக 3 பந்துப்பரிமாற்றங்கள் செய்த முகமது நபி 19 ஓட்டங்கள் கொடுத்திருந்தார். பும்ரா 4 பந்துப்பரிமாற்றங்களில் 27 ஓட்டங்கள் கொடுத்திருந்தார்.
இறுதிப் பந்துப்பரிமாற்றத்தில் 26 ஓட்டங்கள் கொடுத்தது மும்பை. 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 206 ஓட்டங்கள் எடுத்தது சி.எஸ்.கே. மும்பை இந்தியன்ஸ் அணி 207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்தி வருகிறது. (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.