புதியவன்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 29 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. 207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 180 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இந்தப் போட்டியில் சி.எஸ்.கே. சார்பில் மதீஷ பத்திரண சிறப்பாக பந்து வீசினார்.
நான்கு விக்கெட்களை வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு அவர் வித்திட்டார். நடப்பு சீசனில் வெளியூர் போட்டியில் சி.எஸ்.கே. பதிவு செய்த முதல் வெற்றி இது. மும்பை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா, இப்போட்டியில் சதம் விளாசினார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இணைந்து இன்னிங்ஸை ஆரம்பித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 70 ஓட்டங்கள் சேர்த்தனர்.
இந்தக் கூட்டணியை மதீஷ பத்திரண பிரித்தார். இஷான் கிஷனை 8 பந்துப்பரிமாற்றத்தில் 23 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழக்கச் செய்தார். அதே பந்துப்பரிமாற்றத்தில் சூர்யகுமார் யாதவை ஓட்டம் எதுவும் எடுக்கவிடாமல் ஆட்டமிழக்கச் செய்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் எல்லை கோட்டுக்கு அருகே சிறப்பாக செயல்பட்டு அவரது அற்புதமான பிடியெடுப்பை மேற்கொண்டார்.பத்திரணவின் அந்த பந்துப்பரிமாற்றம் சென்னை அணிக்குத் திருப்புமுனையாக அமைந்தது.
மறுமுனையில் 30 பந்துகளில் அரைச்சதம் கடந்தார் ரோஹித் சர்மா. அதேநேரத்தில் திலக் வர்மாவுடன் 60 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை அமைத்தார். 31 ஓட்டங்கள் எடுத்திருந்த திலக் வர்மாவை பத்திரண 14 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் வெளியேற்றினார். 16 மற்றும் 17 பந்துப்பரிமாற்றங்களில் ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரொமாரியோ ஷெப்பர்ட் களத்துக்கு வந்தார்.
இறுதி மூன்று பந்துப்பரிமாற்றங்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 53 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 18 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் ரொமாரியோ ஷெப்பர்ட்டின் விக்கெட்டை வீழ்த்தினார் பத்திரண. தொடர்ந்து முகமது நபி துடுப்பெடுத்தாட வந்தார். இறுதிப்பந்துப்பரிமாற்றத்தில் ரோஹித் சர்மா சதம் விளாசினார். 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 186 ஓட்டங்கள் எடுத்தது மும்பை. ரோஹித் சர்மா 63 பந்துகளில் 105 ஓட்டங்கள் எடுத்திருந்தார். நபி 4 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
நான்கு பந்துப்பரிமாற்றங்களில் பத்திரண 28 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். சென்னை அணிக்கு சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி கொடுத்தார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது சி.எஸ்.கே.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.